tamilnadu

img

வாரணாசி சாலைகள் கழுவப்பட்டு, வழியெங்கும் தூவப்பட்ட ரோஜா மலர்கள் வேட்புமனு தாக்கலிலும் மோடி ஆடம்பரம்..

வாரணாசி:

பிரதமர் மோடி, நாளொன்றுக்கு நான்குமுறை உடைமாற்றுபவர் என்று கூறப்படுவதுண்டு. ஒபாமா இந்தியா வந்தபோது, அவரை வரவேற்பதற்காக மோடி அணிந்த கோட் பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. 15 லட்ச ரூபாய் மதிப்பிலான அந்த கோட் முழுவதும், தனது பெயரை குறுக்கும் நெடுக்குமாக மோடி எம்பிராய்டரிங் செய்திருந்தார். 

மோடி எளிமையானவர் என்று ஆரம்பத்தில் நம்பியவர்கள் கூட, 15 லட்ச ரூபாய் கோட்-டைப் பார்த்தபின், மோடி ஒரு ஆடம்பரவாசி என்பதை உணர்ந்து கொண்டார்கள்.

இந்நிலையில், பிரதமர் மோடி, வாரணாசி தொகுதிக்கான வேட்புமனுத்தாக்கல் நிகழ்ச்சியின்போதும் கூட, தனது ஆடம்பரத்தை மாற்றிக்கொள்ளவில்லை என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


வாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த பிரதமர் மோடிக்காக, 1 லட்சத்து 40 ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணடிக்கப்பட்டு, சாலைகளை முழுமையாக கழுவி விடப்பட்டதாகவும், பல லட்ச ரூபாய் மதிப்பிலான ரோஜாமலர்கள் மோடி மீது தூவப்பட்டதாகவும் ‘தி டெலிகிராப்’ செய்தி வெளியிட்டுள்ளது.

வேட்புமனுத் தாக்கலுக்கு முன்னதாக, பிரதமர் மோடி, கால பைரவர் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தி விட்டு, அதன்பின்னர்தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.


முன்னதாக, திறந்த வாகனத்தில் பிரமாண்ட பேரணியில் ஈடுபட்டார். அவருக்கு சாலை நெடுகிலும் பாஜக தொண்டர்கள் திரண்டு மிகப் பெரும் வரவேற்பை அளித்தனர். ரோஜாப்பூக்களைத் தூவி முழக்கங்களை எழுப்பினர். வாரணாசியில் அமைந்துள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்திற்கு சென்ற மோடி, பல்கலைக்கழக நிறுவனரான மறைந்த மதன் மோகன் மாளவியா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


இதன் பின்னணியில்தான், பிரதமர் மோடியின் இந்த பயணத்திற்காக வாரணாசியின் சாலைகளை சுத்தம் செய்ய 1.4 லட்சம் லிட்டர் குடிநீர் செலவிடப்பட்டுள்ளதாக ‘தி டெலிகிராப்’இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. பிரதமர் மோடி மீது தூவுவதற்காக டன் கணக்கில் ரோஜாப்பூக்கள் வாரணாசி நகருக்கு வரவழைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. மோடி மீது தூவப்பட்ட ரோஜா பூக்களின் மதிப்பு மட்டும் ரூ. 30 லட்ச ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.


பிரச்சனை என்னவென்றால், வாரணாசி குடிநீர் தட்டுப்பாட்டால் தவிக்கும் மாநகராட்சி ஆகும். இங்குள்ள 30 சதவிகித குடும்பங்களுக்கு குடிநீர் ஏற்பாடு இல்லை. அவர்கள் நிலத்தடி நீரையும், எப்போதாவது வரும் டேங்கர் லாரிகளில் விநியோகிக்கப்படும் குடிநீரையும் மட்டுமே நம்பியிருக்கின்றனர்.ஆனால், பிரதமர் மோடிக்காக, 40 டேங்கர் லாரி அளவிற்கான குடிநீர் வீணடிக்கப்பட்டு சாலைகள் கழுவி விடப்பட்டுள்ளன. இதற்கான பணியில் மட்டும் 400 மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.


இது பொதுமக்களை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியிருக்கிறது. தங்களுக்கு குடிநீர் விநியோகிக்க மறுக்கும் அதிகாரிகள், மோடிக்காக 1 லட்சத்து 40 ஆயிரம் லிட்டர் குடிநீரை சாலையில் கொட்டி வீணடித்து இருக்கிறார்கள்; இதற்கு யார் பொறுப்பு? என்று கேள்வி எழுப்பத் துவங்கியுள்ளனர்.“மோடி வருவதால் சாலைகளை சுத்தம் செய்ய எங்களுக்கு உத்தரவிடப்பட்டது, அதன்படி நாங்கள் பணிகளை மேற்கொண்டோம், மற்றபடி தங்களுக்கு ஒன்றும் தெரியாது” என்று வாரணாசி அதிகாரிகள் கையை விரித்துள்ளனர்.


;